search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பயன்பாடு"

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை என்பதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. #PlasticBan
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு பகுதியில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெருமளவில் குறைந்தது. சிறுவியாபாரிகளும் மாற்றுப்பொருட்களை பயன்படுத்தினர்.

    ஆனால் அதன்பின்னர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதில்லை. இதனால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

    சுற்றுலா இடங்களுக்கு செல்ல வத்தலக்குண்டு முக்கிய சந்திப்பு என்பதால் அதிகளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவது இல்லை. ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு குறைந்ததால் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் கப், கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவியத்தொடங்கியுள்ளன. பெரும்பாலான தெருக்களில் உள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து நிற்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையிலேயே தேங்கி நிற்கிறது.

    எனவே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ரோந்து பணியை மீண்டும் தீவிரப்படுத்தி பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுவியாபாரிகளை குறிவைக்காமல் மொத்தமாக தயாரிக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #PlasticBan

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டை வளாகத்தில் உள்ள டீக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. #Plasticban #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையாமல் புழக்கத்தில் உள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அலுவலகங்கள் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் ஏராளமான டீக்கடை, ஜூஸ் கடை, பெட்டிக்கடைகள் உள்ளன.



    இந்த கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. வழக்கம் போல் பிளாஸ்டிக் டம்ளரில் தான் ஜூஸ் கொடுக்கிறார்கள்.

    உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோரம் ஆங்காங்கே வீசப்பட்டு குப்பையாக காட்சி அளிக்கிறது. இதே நிலைதான் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாமுவேல் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் உபயோகத்தை ஒரே நாளில் தடை செய்துவிட முடியாது. இதை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதை முழுமையாக செயல்படுத்த முடியும். மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு வருபவர்கள் வெறும் கையுடன்தான் வருகிறார்கள்.

    கடைக்காரர்கள்தான் இலவசமாக பிளாஸ்டிக் பையில் பொருட்களை போட்டு கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் கடைக்கு வருபவர்கள் தான் துணிப்பை கொண்டு வர வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படாததால் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து இங்குள்ள கடைகளுக்கு பிளாஸ்டிக் பை, கப் போன்றவை வந்துவிடும். எனவே இதை நடைமுறைபடுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

    நாங்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு காலண்டருக்கு பதில் துணிப்பை வழங்க முடிவு செய்துள்ளோம். காய்கறி கடைகளுக்கு வருபவர்களுக்கு தரமான கூடைகளை அன்பளிப்பாக கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூப்பர் மார்க்கெட், போன்ற பெரிய நிறுவனங்களில் 1-ந்தேதி முதல் அட்டை பைக்கு 6 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #Plasticban #TN

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #PlasticBan
     கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் வணிக துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன் பாரதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்வளம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வருங்காலங்களில் துணி பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறப்பட்டது.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உழவர் சந்தை ஊழியர்கள் கலந்து கொண்டனர். #PlasticBan
    ×